உன்னை அறிந்தால் - tamil story 8

மாதவபுரியை ஆண்ட மாதவ மன்னன், படைவீரர்களுடன் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஓரிடத்தில் தன் படையைப் பிரிந்து திசைமாறி சென்றுவிட்டான். பசி அதிகமாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்த போது, ஒரு குடிசை தென்பட்டது. அங்கே சென்றான்.

ஒரு முனிவர் இருந்தார். அவர் மன்னனிடம், "யார் நீ!'' என்று கேட்டார்.

"என் பெயர் மாதவன், நான் இந்நாட்டின் மன்னன்'' என்று பதிலளித்தான்.

"மகனே! நீ யார் என்று தான் கேட்டேனே தவிர, உனது பதவி பற்றி கேட்கவில்லையே. வேறொரு நாட்டு மன்னன் உன்னைச் சிறை பிடித்தால் உன் பதவி காணாமல் போய்விடும். உண்மையில் நீ யார் என்று தான் கேட்டேன்'' என்று குழப்பினார் அவர். 

"சுவாமி! நான் பசியோடு இருக்கிறேன். ஆனால், நீங்கள் ஏதோ விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள்'' என்றான். 

இருந்தாலும், மாதவனின் மனதிற்குள், முனிவரின் “உண்மையில் யார் நீ?” என்ற கேள்வி லேசான சலனத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. 

இந்த வேளையில் சத்தியகாமன் என்பவன், அந்த முனிவருக்கு வேண்டிய உணவுவகைளை கொண்டு வந்தான். அவன் முனிவரை வணங்கி பழக்கூடையை கொடுத்துச் சென்றான். மாதவனை, அவன் கண்டுகொள்ளவே இல்லை. 

நாட்டுக்கே மன்னனாக இருந்தும், தன்னை வணங்காமல் சென்றதை எண்ணி மாதவனின் முகம் இறுகியது. முனிவரும் அவன் கொண்டு வந்த பழத்தில் ஒன்றைக் கூட அவனிடம் நீட்டவில்லை. 

தனக்கு கொடுக்க முனிவருக்கு மனமில்லை போலும் என்றெண்ணி அங்கிருந்து கிளம்பினான். முனிவர் அவனை நிறுத்தி, "மாதவா! சத்யகாமனுக்கு உன்னைப் பற்றித் தெரியாது. அதனால், வணங்காமல் சென்று விட்டான். மன்னர் பதவி நிலையில்லாதது. வேறொருவன் இந்நாட்டு மன்னனாகி விட்டால், இந்த மதிப்பை நீ எதிர்பார்க்க முடியாது. உண்மையில் யார் நீ என்பதை தெரிந்து கொள்வது நல்லது,'' என்று சொல்லி விட்டு, பழங்களை சாப்பிடக் கொடுத்தார். 

அந்த நேரத்தில் அங்கு ஒரு வீரன் அவசரமாக குதிரையில் வந்தான். 

மாதவனிடம், "அரசே! நம் கோட்டையை பகைமன்னர்கள் சூழ்ந்து கொண்டு விட்டனர். தலைநகரில் போர் நடந்து கொண்டிருக்கிறது. வாருங்கள்'' என்றான் பதைபதைப்புடன். 

மாதவனுக்குப் பசி காணாமல் போனது. குதிரையை நோக்கி ஓடினான். முனிவர் அவனைத் தடுத்து பழங்களைச் சாப்பிடும்படி கூறினார். "சுவாமி! நான் அமைதி இழந்து தவிக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்'' என்று மறுத்தான். 

"முதலில் சாப்பிடு. களைப்பைப் போக்க சிறிது நேரம் ஓய்வெடு. கொஞ்சம் பொறுமையாக இரு,'' என்று முனிவர் அறிவுரை சொன்னார்.

மாதவனும் பழம் சாப்பிட்டு, பதட்டம் நீங்கி அமைதியானான்.

களைப்பின் காரணமாக மரநிழலில் உறங்கி விட்டான். 

திடீரென்று கண்விழித்ததும், வேகமாக எழுந்து நின்றான். 

"சுவாமி! எப்படியோ நான் என்னையும் அறியாமல் தூங்கிவிட்டேன்.'' என்றான். 

"நான் இந்நாட்டின் மன்னன். நான் பசியோடு இருக்கிறேன். நான் அமைதியை இழந்து தவிக்கிறேன். நான் அறியாமல் தூங்கிவிட்டேன். இப்படி எத்தனையோ விதத்தில் பதில் தந்து விட்டாய். உண்மையில் யார் நீ என்பதை அறிந்தாயா?'' என்று முனிவர் கேட்டார். 

அமைதியாக நின்ற மாதவனிடம், "உடலோ, உள்ளமோ நான் அல்ல. நான் என்பது உண்மையில் ஆன்மா மட்டும் தான். உனது வாழ்வின் அன்றாட விஷயங்களான நாடு, போர், வெற்றி, தோல்வி என்பதெல்லாம் தற்காலிகமானதே. உயிர் உள்ளவரை மட்டுமே அதற்கு பயன். ஆன்மிக வாழ்வில் வெற்றியடைவதை வாழ்வின் குறிக்கோளாகக் கொள்.'' என்று அறிவுரை சொன்னார்.

வாழ்வில் வந்து போகும் பொருட்கள் நிரந்தரமல்ல என்ற இந்த அறிவுரை உண்மையானதே என்று சிந்தித்தபடியே, தெளிந்த உள்ளத்துடன் மன்னன் கிளம்பினான்.

சிறுகதைகள் படியுங்கள்


keywords : tamil stories, fairy tales in tamil, short stories in tamil, kids stories in tamil, moral stories in tamil, tamil thriller short stories, tamil sirukathaigal, tamil stories for kids, siruvar kutti kathaigal in tamil, neethi kathaigal in tamil, folk tales in tamil, சிறுகதைகள், குட்டிக்கதைகள், சிறுவர் கதைகள், குழந்தைகளுக்கான சிறுகதைகள், தன்னம்பிக்கை சிறுகதைகள், நீதிக்கதைகள்.